யாழில் இடம்பெறவுள்ள களியாட்ட நிகழ்வின் பின்னணியில் மக்கள் பிரதிநிதிகள்-ஊடகங்களும் விலைக்கு வாங்கப்பட்டன

க.பொ.த உயர்தர பரீட்சை சமயத்தில் யாழ்ப்பாணத்தில் களியாட்ட நிகழ்வுகள் நடத்தப்படுவது குறித்து வழக்கமாக எழும் எதிர்ப்பு குரல்கள் இம்முறை எழவில்லை. உயர்தர பரீட்சை சமயத்தில் சமூக பொறுப்புணர்வின்றி நடத்தப்படும் இந்த நிகழ்வு குறித்து ஊடகங்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஏன் மௌனமாக இருக்கின்றார்கள் என்பதை அறிய கடந்த சில தினங்களாக தமிழ்பக்கம் தீவிர தேடுதல் நடத்தியது. இதன்போது பெரும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்பவர்களே முன்னர், உன்னி கிருஷ்ணனை அழைத்து இசைநிகழ்ச்சியொன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர். எனினும், இறுதிநேர எதிர்ப்பால் அது இரத்து செய்யப்பட வேண்டியதாகி விட்டது.

.....

இந்த அனுபவத்தில், இம்முறை முன்கூட்டியே ஊடகங்கள், மக்கள் பிரதிநிதிகளை வளைத்துப் போடும் காரியத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டிருந்தார்கள். யாழிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையும், விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதனின் குடும்ப நிறுவனமான கப்பிடல் எப்.எம் நிறுவனமும் இந்த களியாட்ட நிகழ்ச்சிக்கு அனுசரணையாளர்கள்.

இதேபோல, யாழிலிருந்து வெளியாகும் உதயன், வலம்புரி பத்திரிகைகளிற்கும் விளம்பரம் என்ற பெயரில் பெருமளவு பணம் வழங்கப்பட்டிருந்தது.

விளம்பரம் என்ற பெயரில் இந்த ஊடகங்களிற்கும் பெருமளவு பணம் வழங்கப்பட்டிருந்தது. உதயன், தினக்குரல், வலம்புரி பத்திரிகைகளிற்கு வழங்கப்பட்ட பணம், இந்த நிகழ்விற்கு எதிரான எந்த செய்தியும் வெளியாகாமல் கவனித்துள்ளது. இந்த சிறிய பணத்திற்காக இந்த ஊடகங்கள் சமூக பொறுப்பை மறந்துள்ளன. விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதனின் குடும்ப நிறுவனமும் இந்த நிகழ்விற்கு அனுசரணையென்பதை கவனிக்கவும்.

இதன்பின்னர் வடமாகாணசபை உறுப்பினர்கள் பலருடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நேரடியாக பேசியுள்ளனர். வடக்கு அவைத்தலைவர், எதிர்க்கட்சி தலைவர், மற்றும் தமிழரசுக்கட்சி, ரெலோ உறுப்பினர்களுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நேரடியாகவும், தொலைபேசி வழியாகவும் பேசியதாக அறிய முடிகிறது.

இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்படுவதற்கு முன்னரேயே வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடனும் ஏற்பாட்டாளர்கள் பேசியுள்ளனர். வடமாகாணசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு உறுப்பினர்களுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நேரடியாக பேசி, தமது களியாட்ட நிகழ்வை குழப்ப வேண்டாமென கோரிக்கை விடுத்திருந்தனர். இவர்கள் தமிழரசுக்கட்சி, ரெலோ, ஈ.பி.டி.பி அமைப்பின் உறுப்பினர்கள். அவர்கள் கோரிக்கை மட்டுமா விடுத்தார்கள், “வேறு ஏதேனும் நடந்ததா“ என்பது குறித்து அறிய முடியவில்லை.

இதேவேளை, நேற்றைய மாகாணசபை அமர்வின் பின்னர் மாகாணசபை உறுப்பினர் ச.சகிர்தன், அவைத்தலைவரின் நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர்களிடம் விசனம் வெளியிட்டிருந்தார்.“ இந்த விடயத்தை இன்றைய (நேற்றைய) அமர்வில் பேசுவதென அவைத்தலைவரிடம் கேட்டிருந்தேன், ஆரம்பத்தில் அவர் விரும்பவில்லை. நான் வற்புறுத்தியதையடுத்து சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் கடைசிவரை என்னை பேச அனுமதிக்காமல் ஏமாற்றிவிட்டார்“ என விசனப்பட்டுக் கொண்டிருந்தார்.

அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துடனும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே பேசியிருந்ததை தமிழ்பக்கம் அறிந்திருக்கிறது. இதனடிப்படையில் வடமாகாணசபையில் களியாட்ட நிகழ்விற்கு எதிராக ஒரு குரல் பதிவாகிவிடக்கூடாது என்பதில் அவைத்தலைவர் மிக கச்சிதமாக நடந்து கொண்டிருக்கிறார்.

வடக்கு எதிர்க்கட்சி தலைவருடனும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தொலைபேசி வழியாக பேசியிருந்தார்கள். நேற்று வடமாகாணசபையில் பயங்கர அறச்சீற்றத்தை வெளிப்படுத்தினார் எதிர்க்கட்சி தலைவர். “அமைச்சரவை இல்லாத சபை“, “மக்களிற்கு பொறுப்பு கூற வேண்டும்“ என அறக்கத்தியை 360 டிகிரியிலும் சுழற்றிக் கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் தனது முக்கியமான பொறுப்புணர்வு விடயத்தில் மட்டும் அறக்கத்தியை மேசைக்கடியில் வைத்துவிட்டு, கப்சிப் ஆக உட்கார்ந்து விட்டார்.

ஏற்பாட்டாளர்களின் இரகசிய பேச்சுக்களை தொடர்ந்து, கடந்த சில தினங்களாகவே வடமாகாணசபை உறுப்பினர்கள் தங்களிற்குள் இந்த விடயத்தை தீவிரமாக பேசியுள்ளனர். உயர்தர பரீட்சை சமயத்தில் மாணவர்களின் கவனச்சிதறலை ஏற்படுத்தும் இந்த நிகழ்வை நடத்துவதால் எந்த பிரச்சனையுமில்லையென இந்த மக்கள் பிரதிநிதிகள் எப்படி முடிவெடுத்தார்கள்?

ஊடகங்கள், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புணர்வற்ற தன்மையை இது புலப்படுத்துகிறது. அரசியல் அறமும், நேர்மையும், பொறுப்புக்கூறலும் சும்மா வெளிப்பேச்சிற்கு மட்டுமே, இரகசியமாக செய்வதெல்லாம் தில்லாலங்கடி வேலைகள் என்பதையா நமது மக்கள் பிரதிநிதிகள் உணர்த்துகிறார்கள்?

2015 நாடாளுமன்ற தேர்தலின் போது, யாழ்ப்பாண பத்திரிகையொன்று தன்னை அணுகி, தேர்தல் விளம்பரம் தருமாறு கோரியதாகவும், அப்படி தாராத பட்சத்தில் கடுமையாக தாக்கி செய்தி வெளியிடுவோம் என மிரட்டல் பாணியில் பேசியதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான சிறிய இரகசிய டீலிங்குகளிற்கே கவிழ்ந்துவிடும் ஊடகங்களும், மக்கள் பிரதிநிதிகளும் எப்படி இந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்? காப்பாற்றுவார்கள்?

Related Post