குடிப்பதற்கு நீர் இல்லை விற்பதற்கு அனுமதி வழங்கியது யார்?

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீர் போத்தல் தயாரிக்கும் தொழிச்சாலையை மூட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கித்துள் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

.....

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் பொதுச்சந்தைக்கு முன்பாக நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், சாரதா மகளிர் அமைப்பு, நகோமி பெண்கள் அமைப்பு என்பன இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதில் புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் புல்லுமலை தொழிற்சாலைக்கு எதிராக “இயற்கை வளங்களை அழிக்காதே” “நிலத்தடி நீரை உறிஞ்சி விற்காதே” “குடிப்பதற்கு தண்ணீர் இல்லை விற்பதற்கு அனுமதி வழங்கியது யார்?” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை தடுத்து நிறுத்துமாறு பல்வேறு போராட்டங்களை நடாத்தியபோதிலும் இதுவரையில் குறித்த தொழிற்சாலையை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

புல்லுமலை உட்பட அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினையும் குடிநீரையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படும் குறித்த தொழிற்சாலை தமது பகுதிக்கு தேவையில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சிவானந்தன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

சுற்றாடல் துறைக்கு ஜனாதிபதி பொறுப்பாக உள்ள நிலையில் ஜனாதிபதி இதில் தலையிட்டு இந்த தொழிற்சாலையினை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

Related Post