துக்க வீட்டில் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் கோபி

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியை சேர்ந்த இந்திய மாணவர் சங்க தலைவர் அபிமன்யூ படுகொலை செய்யப்பட்டார்.

அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்னொரு சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அபிமன்யூவை கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

.....

மாணவர் அபிமன்யூ கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அபிமன்யூ ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்திற்கு சிலர் உதவிகளும் செய்ய முன்வந்தனர்.

மேலும் மாணவர் அபிமன்யூ குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தத்தெடுத்துள்ளது. அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அந்த கட்சி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகரும், பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யுமான சுரேஷ்கோபி மாணவர் அபிமன்யூ வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அபிமன்யூ பெயரில் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.


நடிகர் சுரேஷ்கோபி அங்கு வந்துள்ள தகவல் கிடைத்ததும் ஏராளமான ரசிகர்கள் அந்த வீடு முன்பு திரண்டனர். துக்கம் விசாரித்துவிட்டு வெளியில் வந்த சுரேஷ்கோபி ரசிகர்களை பார்த்ததும் அவர்களுடன் சிரித்தபடி செல்பி எடுத்துக்கொண்டார்.

இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துக்க வீட்டிற்கு சென்ற இடத்தில் சுரேஷ்கோபி செல்பி எடுத்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சுரேஷ்கோபியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Related Post