13வயது தன் மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு மூன்று ஆயுள் தண்டணை

திருப்பூர்: காங்கயத்தில் மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் தீர்ப்பளித்தது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் எபிநேசன் துரைராஜ் (44). வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையால் மனைவி பிரிந்து சென்றநிலையில் முதல் மகள் அம்மாவுடன் சென்றுவிட்டார். 13 வயதான இரண்டாவது மகள் தந்தையுடன் வசித்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் 13 வயது மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில் இந்த விபரம் சைல்டுலைன் அமைப்பின் கவனத்துக்குத் தெரியவந்தது. பிறந்த குழந்தையை சேலம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில் அவரது தந்தை எபிநேசன் துரைராஜ் பல முறை பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடைபெற்றது. இதில் எபிநேசன் துரைராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு ஒவ்வொரு பிரிவின் கீழும் தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் மொத்தம் மூன்று ஆயுள் தண்டனைகளும், தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத்தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜெயந்தி நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்….

.....

Related Post