2 ரெயில்களில் பயணிகளிடம் நகை-பணம் கொள்ளை

ஐதராபாத்தில் இருந்து திருப்பதி-கச்சிக்குடா வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு ஆந்திரமாநிலம் ஜூகுரு- தடியத்ரி-கூட்டி இடையே கொள்ளை கும்பல் ஒன்று தண்ட வாளத்தின் சிக்னலில் கோளாறு ஏற்படுத்தியது.

எனவே, திருப்பதி-கச்சிக்குடா வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டது. உடனே தண்டவாளத்தின் அருகே புதரில் மறைந்து இருந்த 12 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ரெயிலின் எஸ்.10, எஸ்.11, எஸ்.12 ஆகிய 13 பெட்டிகளில் புகுந்தது.

.....

பின்னர் பயணிகளை மிரட்டி அடக்கினர். 2 பெண்களிடம் இருந்து பணம், மற்றும் தங்க சங்கிலிகளை கொள்ளையடித்தனர். ஆண் பயணிகளிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டனர். இதற்கிடையே ரெயில் பெட்டியில் இருந்து பயணிகள் சிலர் அலாரத்தை அடித்தனர்.

உடனே எஸ்.5 பெட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் ரெயிலில் இருந்து குதித்த கொள்ளையர்கள் இருளில் குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

அதன் பின்னர் தொழில் நுட்ப ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டது. அதை தொடர்ந்து ரெயில் புறப்பட்டு சென்றது.

இக்கொள்ளை சம்பவம் குறித்து அனைத்து ரெயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டது. இருந்தும் இச்சம்பவம் நடந்து சிறிது நேரத்தில் மற்றொரு ரெயிலிலும் கொள்ளை சம்பவம் நடந்தது.

ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. ஜக்லாசீருவு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிக்னல் கிடைக்கவில்லை. இங்கும் கொள்ளையர்கள் தான் சிக்னலில் கோளாறு ஏற்படுத்தி இருந்தனர்.

எனவே அங்கு ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே ரெயில் பெட்டிக்குள் கொள்ளை கும்பல் புகுந்தது. இதற்கிடையே உஷார் நிலையில் இருந்த ரெயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதை சமாளிக்க முடியாத கொள்ளை கும்பல் ஒரு பெண்ணிடம் இருந்து சங்கிலியை பறித்தது. அதில் பாதி மட்டும் கொள்ளையர்கள் கையில் சிக்கியது. அத்துடன் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இந்த 2 சம்பவங்கள் குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபட்டுள்ளது. இவை அருகருகே நடந்துள்ளது.

இக்கொள்ளை சம்பவங்களை சாதாரண கும்பல் நடத்தி இருக்க முடியாது. தொழில்நுட்பம் தெரிந்தவர்களால் தான் செய்திருக்க முடியும். எனவே தான் சிக்னல் கோளாறு ஏற்படுத்தி கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Related Post