பசு கொலை பீதியில் வாலிபர் அடித்துக் கொலை

உத்தர பிரதேசத்தில் பசுவை கொல்ல முயன்றதாக நினைத்து வாலிபரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.யில் பசு கொலை பீதியில் வாலிபர் அடித்துக் கொலை – 2 பேர் கைது
மீரட்:

.....

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் பகுதியில் உள்ள பாஜீரா குர்த் கிராமத்தை சேர்ந்தவர் காசிம் (45). இவரது நண்பர் சமைதீன் (55). இவர்கள் இருவரும் அவர்களது வயலுக்கு சென்றபோது அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுவையும் கன்றுக்குட்டியையும் விரட்டியடிக்க முயன்றனர்.

அப்போது அந்த பகுதியாக வந்த சிலர், இருவரும் பசுவை கொலை செய்ய போவதாக நினைத்து வதந்தி பரப்பியதால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஒரு கும்பல் தடியுடன் வந்தது. அவர்களிடம் விசாரணை எதுவும் நடத்தாமல் கடுமையாக தாக்கியது.

இதனால் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அப்போது தங்களை தாக்கிய கும்பலிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். ஆனால் அவர்களுக்கு யாரும் தண்ணீர் தரவில்லை. அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் காசிம் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் சமைதீன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தகவல் அறிந்ததும் காசிம் மற்றும் சமைதீனின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் கும்பலிடம் இருந்து சமைதீனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்ட காசிமின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதில், பசுவை கொன்றதாக கும்பல் தாக்கி காசிம் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

அதை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர். மாறாக காசிம் மற்றும் அவரது நண்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாகவும், அதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இ.பி.கோ. 307 (கொலை முயற்சி), 302 (கொலை) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Post