காணிக்கை நாணயங்களை விரைவில் எண்ணி முடிக்க நடவடிக்கை – திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையானுக்குப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய இந்திய, வெளிநாட்டு சில்லரை நாணயங்களை விரைவில் எண்ணி முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.

காணிக்கை நாணயங்களை விரைவில் எண்ணி முடிக்க நடவடிக்கை – திருப்பதி தேவஸ்தானம்
சில்லரை நாணய மூடைகளை இணை அதிகாரி நேரில் பார்வையிட்டபோது எடுத்தபடம்.
திருமலை:

.....

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் பிரதான உண்டியலில் ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை நாணயங்கள், தங்கம், வெள்ளிப் பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அதில் ரூபாய் நோட்டுகள் திருமலையிலேயே பரகாமணி அறையில் எண்ணப்படுகின்றன.

இந்திய மற்றும் வெளிநாட்டுச் சில்லரை நாணயங்கள் மூடைகளில் கட்டி, திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்குள்ள பரகாமணி அறையில், தேவஸ்தான ஊழியர்கள் சில்லரை நாணயங்களை எண்ணுகிறார்கள். சில்லரை நாணய மூடைகள் அடுக்கி வைத்திருக்கும் அறையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் திருமலையில் உடனுக்குடன் எண்ணப்படுகின்றன. ஆனால் இந்திய, வெளிநாட்டுச் சில்லரை நாணயங்கள் மட்டும் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு தான் காலதாமதம் ஆகிறது. அதனை விரைவாக எண்ண வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். அங்கு கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்கள், மின்விசிறிகள் ஆகியவற்றை பொருத்தி கூடுதலாக ஊழியர்களை நியமித்து நாணயங்களை விரைவாக எண்ணி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சுவேத பவனில் தேவஸ்தான ஊழியர்களுக்கான கேண்டீன் உள்ளது. அதற்கு பதிலாக புதிதாக கேண்டீன் கட்டப்பட்டு வருகிறது. அந்தப் பணிகள் முடிந்ததும் பழைய கேண்டீன் கட்டிடத்தைச் சில்லரை நாணயங்களை எண்ணுவதற்குப் பயன்படுத்தி கொள்ளலாம். வெளிநாட்டு மற்றும் இந்திய சில்லரை நாணயங்களை விரைவில் எண்ணி முடித்து, மத்திய அரசின் உதவியோடு வெளிநாட்டு நாணயங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக நாங்கள் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது என்ஜினீயர் சந்திரசேகர்ரெட்டி, நிதித்துறை அதிகாரி பாலாஜி, பரகாமணி அதிகாரி தாமோதரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Post