ஆபரேஷன் அம்மா என்ற பெயரில் கவுரி லங்கேஷ் திட்டமிட்டு கொலை

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்துவந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி அவருடைய வீட்டில் மர்மநபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழுவினர், இந்த கொலையில் தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ளனர்.

எழுத்தாளர் பகவானை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் தொடர்புடைய பிரவீன் என்ற சுஜீத்குமார், அமோல் காலே, பிரதீப், மனோகர் மற்றும் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்த பரசுராம் வாக்மோர் (வயது 26) ஆகியோர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான பரசுராம் வாக்மோர் தான் கவுரி லங்கேசை சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

.....

இந்த விசாரணையின்போது கவுரி லங்கேசை கொலை செய்ய கொலையாளிகள் ‘ஆபரேஷன் அம்மா’ என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டியதும், இதையே அவர்கள் தங்களுக்குள் சங்கேத வார்த்தையாக பயன்படுத்தியதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து சிக்கிய டைரிகளில் பல்வேறு சங்கேத வார்த்தைகள், அடையாள குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக அவர்கள் சங்கேத வார்த்தை மூலம் சுமார் ஒரு ஆண்டாக பொது தொலைபேசியில் இருந்து ஒருவரையொருவர் தொடர்புகொண்டு பேசி வந்துள்ளனர்.

கவுரி லங்கேஷ் இந்துக்களுக்கு எதிராக பேசியது, எழுதியது குறித்து பரசுராம் வாக்மோரிடம் எடுத்துக்கூறி அவரை ‘மூளை சலவை’ செய்து கொலை செய்ய வைத்தது தெரியவந்துள்ளது. அவர் கவுரி லங்கேசை கொலை செய்ய ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு பெலகாவியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் மராட்டியத்தை சேர்ந்த ஒருவர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்துள்ளார். அப்போது சுமார் 500 குண்டுகளை சுட்டு பரசுராம் வாக்மோர் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

கைதான பரசுராம் வாக்மோர் ஸ்ரீராமசேனை அமைப்பை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதனை அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் தொடர்ந்து மறுத்துவருகிறார். ஸ்ரீராமசேனை அமைப்பின் விஜயாப்புரா மாவட்ட தலைவர் ராகேஷ் மத் என்பவரை பிடித்து நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, பரசுராம் வாக்மோர் பற்றிய பல்வேறு விஷயங்களை அவர்கள் கேட்டு அறிந்ததாக சொல்லப்படுகிறது.

2 பேருக்கும் இடையேயான பழக்கம், கவுரி லங்கேஷ் கொலைக்கு பின்பு பரசுராம் வாக்மோரின் நடவடிக்கை எப்படி இருந்தது என்பது போன்ற முக்கிய கேள்விகளை அவரிடம் சிறப்பு விசாரணை குழுவினர் கேட்டுள்ளனர். இதற்கு ராகேஷ் மத் பதில் அளித்துள்ளார். கவுரி லங்கேஷ் கொலை வழக்கு பற்றிய செய்திகளை பரசுராம் வாக்மோர் உன்னிப்பாக படித்து அதுபற்றி ராகேஷ் மத்திடம் விவாதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே, நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் பரசுராம் வாக்மோரை அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். பரசுராம் வாக்மோரின் தந்தை அசோக், தாய் ஜானகிபாய், மாமா அசோக் காம்ளே ஆகியோர் நேற்று பெங்களூருவில் உள்ள சிறப்பு விசாரணை குழுவினரின் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடமும் விசாரணை நடத்தி பரசுராம் வாக்மோர் பற்றிய விவரங்களை கேட்டு அறிந்ததாக சொல்லப்படுகிறது.

Related Post