அமைச்சரால் அனுப்பப்பட்ட கடிதத்தை மறைத்து வைத்த வவுனியா மாவட்ட செயலக அதிகாரி: வீட்டை இழந்த தமிழர்கள்

மாவட்ட செயலக அதிகாரிகளின் அசமந்ததால் தமிழர்களுக்கு வீடு பறிபோனதா என்ற சந்தேகத்தினை வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் கருத்து முன்னிறுத்தியிருந்தது.

வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான ந.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற பிரதேச ஒருங்கினணப்புக்குழு கூட்டம் இடம்பெற்றது.

.....

இதன்போது 1990ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லீம் மக்களிற்கான வீட்டுத்திட்ட செயலணியின் ஊடாக ஹிச்சிராபுரம், அரபாநகர், மதினாநகர் ஆகிய பிரதேசங்களிற்கு 112 மில்லியன் ரூபா செலவில் 140 வீடுகள் வழங்கப்படவுள்ளமை குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான ந.சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் இக் கிராமங்களின் விபரம் தமக்கு அனுப்பப்பட்டதாகவும் தாம் இக் கிராமங்களை தெரிவு செய்யவில்லை என தெரிவித்ததுடன் குறித்த கிராமங்களில் பயனாளிகளை தாமே தெரிவு செய்வதாகவும் கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த வட மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம்,

வடமாகாணத்தில் 1990 டிசம்பர் 31ம் திகதிக்கு முன் இடம்பெயர்ற்த மக்களினை மீளக்குடியமர்த்துவதற்கான விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. விசேடமாக அந்த செயலணி அமைச்சரவை பத்திரத்திலே வடக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லீம் என்றே பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இச்செயலணி மூலமாக கடந்த வருடம் சிங்கள மக்களிற்கு 100 வீடுகளும், முஸ்லீம்களுக்கு 100 வீடுகளுமாக மொத்தமாக 200 வீடுகள் வழங்கப்பட்டிருந்தது. 2018ம் வருடம் 342 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 வீடுகள் சிங்கள மக்களிற்கும், 292 வீடுகள் முஸ்லீம் மக்களிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ம் திகதி மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை சந்தித்து 1990ம் ஆண்டுக்கு டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் சிங்கள, முஸ்லீம் மக்கள் மாத்திரம் இடம்பெயரவில்லை. பெருந்தொகையான தமிழ் மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர். எனவே சிங்கள மற்றும் முஸ்லீம்களுக்கான மீள்குடியேற்றம் என்பதை நீக்கி வடக்கு மாகாணத்திற்கான இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என என்னால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு 15ம் திகதி அக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு தமிழர்களையும் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்வாங்குவது என்ற முடிவெடுக்கப்பட்டது.

17ம் திகதி மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரால் வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்ட அரசாங்க அதிபருக்கும் முன்பு இச்செயலணியில் குறிப்பிடப்பட்ட சிங்கள, முஸ்லீம் மக்கள் என்ற திட்டத்திற்குள் எல்லோரையும் உள்வாங்குமாறு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இச்செயலணியின் ஊடாக வீடு மாத்திரமன்றி உட்கட்டுமானம், வாழ்வாதாரம் என்பனவும் உள்ளன.

17ம் திகதி என குறிப்பிடப்பட்ட இக்கடிதம் 18ம் திகதி வவுனியா கச்சேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இக்கடிதமானது வவுனியா கச்சேரியில் இருந்து பிரதேச செயலாளர்களிற்கு அனுப்பப்படவில்லை. மேலும் அராசாங்க அதிபருக்கும் இதை தெரியப்படுத்தப்படவில்லை. இக்கடிதத்தினை இத்திட்டத்திற்கு பொருத்தமான அதிகாரிகள் அப்படியே கச்சேரியிலேயே வைத்திருந்துள்ளனர்.

1ம்திகதி 2ம் திகதிகளில் இது தொடர்பாக அரசாங்க அதிபருடன் கதைக்கப்பட்டதன் பின்னர் வவுனியா பிரதேச செயலாளருக்கு 1ம் திகதியன்று இக்கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஏனைய பிரதேச செயலாளருக்கு கிடைக்கப்பெறவில்லை. எனவே மாவட்ட செயலகத்தால் ஏன் இக்கடிதம் அனுப்பி வைக்கப்படவில்லை என்பதை 25ம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்ப குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

Related Post