3 பயங்கரவாத அமைப்புகள் இணைந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி – பிடிபட்ட தளபதி தகவல்

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் 3 பயங்கரவாத அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் காஷ்மீர் தளபதி தெரிவித்துள்ளான்.

3 பயங்கரவாத அமைப்புகள் இணைந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி – பிடிபட்ட தளபதி தகவல்
புதுடெல்லி:

.....

பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது, லக்சர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 3 அமைப்புகளும் இந்தியாவில் நுழைந்து அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இவை தனித்தனியாக செயல்பட்டு இந்தியாவில் தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது 3 அமைப்புகளும் ஒருங்கிணைந்து இந்தியாவில் பல தாக்குதல்களை நடத்தப் போவதாக தகவல் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் காஷ்மீர் தளபதிகளில் ஒருவராக செயல்பட்டு வந்த ஆசிக் பாபா என்பவனை ராணுவத்தினர் கைது செய்தனர். அவனிடம் தற்போது தேசிய புலனாய்வு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவன் பல்வேறு தகவல்களை அவர்களிடம் தெரிவித்து இருக்கிறான். 2017-ம் ஆண்டு புல்வாமா போலீஸ் குடியிருப்புக்குள் 3 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தான் நடத்தினார்கள் என்ற தகவலை ஆசிக் பாபா தெரிவித்தான்.

மேலும் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் தானும் இருந்ததாக கூறினான். அந்த தாக்குதலை முப்திவாகாஸ் என்ற பயங்கரவாதி முன்னின்று நடத்தியதாகவும் கூறினான்.

கடந்த மார்ச் மாதம் ராணுவத்துடன் நடந்த சண்டையில் முப்திவாகாஸ் கொல்லப்பட்டான். அதே போல் கடந்த பிப்ரவரி மாதம் சஞ்சுவானா ராணுவ முகாமில் நடந்த தாக்குதலுக்கும் முப்தி வாகாஸ்தான் காரணமாக இருந்தான் என்றும் ஆசிக் பாபா தெரிவித்தான்.

ஆசிக் பாபா 2015-ல் இருந்து 2017 வரை பல தடவை பாகிஸ்தானுக்கு சென்றதாகவும், அங்கு ஜெய்ஷ் இ முகமது தலைவராக உள்ள மசூத் அசாரின் தலைமை தளபதிகளை அடிக்கடி சந்தித்ததாகவும் தெரிவித்தான்.

பாகிஸ்தானில் ஹைபர் பக்துன் ஹவாவில் உள்ள ஜெய்ஷ் இ முகமது முகாமில் தங்கி இருந்து பல்வேறு பயிற்சிகளை பெற்றதாகவும் அவன் கூறினான்.

தற்போது லஸ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ் இ முகமது ஆகிய 3 அமைப்புகளும் ஒருங்கிணைந்து இந்தியாவில் பல கட்ட தாக்குதலை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தான்.

இந்த 3 அமைப்புகளும் ஒருங்கிணைந்து பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ..எஸ்.ஐ. ஆகியவை தேவையான ஏற்பாடுகளை செய்து திட்டம் வகுத்து கொடுத்து இருப்பதாகவும் அவன் கூறினான்.

காஷ்மீர் எல்லையில் இருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு ஏராளமான தற்கொலை படை பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாக தெரிவித்த அவன், அவர்களை அப்துல்லா என்ற பயங்கரவாதி தலைமை ஏற்று வழி நடத்தி வருவதாகவும் கூறினான்.

பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு ராணுவமே தேவையான பயிற்சிகளை வழங்குவதாகவும், இந்தியாவில் ஊடுருவ செய்து தாக்குதல் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாகவும் அவன் கூறினான்.

மேலும் அரபு நாடுகளில் இருந்து ஏராளமான பண உதவி தங்களுக்கு கிடைப்பதாகவும் ஆசிக் பாபா தெரிவித்தான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளின் பல்வேறு சதித்திட்டங்கள் பற்றியும் அவன் தெரிவித்து வருகிறான்.

Related Post