பருவமழை தீவிரம்- கனமழைக்கு பெண்கள் உள்பட 7 பேர் பலி

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் மேலும் 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று கடந்த வெள்ளிக் கிழமை வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. திருவனந்தபுரம், கோழிக்கோடு, இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் பெய்த இந்த மழை காரணமாக பல இடங்களில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. மழை காரணமாக இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்.

.....

திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையை சேர்ந்த தீபா (வயது 45) என்பவர் தனது தோட்டத்தில் விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்திக்கொண்டு இருந்தபோது ஒரு தென்னை மரம் வேரோடு சாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபா பலியானார். கோழிக்கோடை சேர்ந்த கதீஜா (60) என்ற மூதாட்டியும் தென்னை மரம் விழுந்து பலியானார்.

இதேபோல காசர்கோட்டில் 4 வயது சிறுமி பாத்திமா, எடத்துவாவில் விஜயக்குமார், கண்ணூரில் கங்காதரன், காசர்கோட்டில் சென்னியநாயக் உள்பட 7 பேர் மழைக்கு உயிரிழந்து உள்ளனர்.

சொரணூர் – மங்களூர் ரெயில் பாதையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து தண்ட வாளத்தில் விழுந்தன. இதனால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலுன்டி என்ற இடத்தில் தண்டவாளத்தை ஒட்டியிருந்த மரம் வேரோடு ரெயில்வே மின்பாதையில் சாய்ந்தது. இதனால் மின் கம்பிகள் அறுந்து மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சார ரெயில் சேவைகள் முடங்கியது.

ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், யஷ்வந்த்கூர் – கண்ணூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் – நிஜா முதீன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோவை – மங்கலாபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், திருச்சூர் – கண்ணூர் பாசஞ்சர் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. திருச்சூர்-கோழிக்கோடு சாலையில் பல இடங்களில் மரம் விழுந்ததால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இடுக்கியில் உள்ள கல்லார் குத்தியாறு அணைக்கு அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் குத்தியாறு அணையில் இருந்து 2 மதகுகளை திறந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

வருகிற 13-ந்தேதி வரை கேரளாவில் கனமழை நீடிக்கும் என்றும், மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், சில இடங்களில் 60 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மாநிலத்தின் சில பகுதிகளில் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல கடல் சீற்றமாக உள்ளதாலும் ராட்சத அலைகள் இருப்பதாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

கோவளம், சிறையின்கீழ் விழிஞ்ஞம் உள்பட பல்வேறு இடங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி உள்ளனர்.

Related Post