5 கி.மீ. தூரம் தொட்டில் கட்டி தூக்கி வரப்பட்ட கர்ப்பிணி

பாலக்காடு மாவட்டம் எடவானியில் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை சாலை வசதி இல்லாததால் 5 கி.மீ. தூரம் தொட்டில் கட்டி தூக்கிக்கொண்டு அவரது உறவினர்கள் கோட்டதுறை மருத்துவமனையில் சேர்த்தனர்.

சாலை வசதி இல்லாததால் 5 கி.மீ. தூரம் தொட்டில் கட்டி தூக்கி வரப்பட்ட கர்ப்பிணி
நிறைமாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வந்த உறவினர்கள்.
திருவனந்தபுரம்:

.....

மேட்டுப்பாளையத்தை அடுத்த கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டபாடி அருகே எடவானி என்னும் மலை கிராமம் உள்ளது.

இங்கு ஆதிவாசி, பழங்குடி இனத்தை சேர்ந்த 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் இம் மலை கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், கல்வி கற்கவும், மருத்துவமனை செல்லவும் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து அட்டப்பாடியில் உள்ள கோட்டத்துறைக்கு தான் செல்ல வேண்டும்.

இந்த பாதையில் 5 இடங்களில் வரகை ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் எடவானியில் வசித்து வரும் பழனி என்பவரது மனைவி மணி (28) 4-வது முறையாக கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க முயன்றனர். அதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.


சாலை வசதி இல்லாத நிலையில் கர்ப்பிணியை மூங்கிலில் தொட்டில் கட்டி சுமந்து செல்ல தீர்மானித்தனர். அதன்படி மணியை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு உறவினர்கள் ஓட்டமும், நடையுமாக அட்டபாடியில் கோட்டதுறை மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர்.

மருத்துவமனையில் மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சாலை வசதி இல்லாத நிலையில் இது போன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகள் பலரையும் தொட்டில் கட்டிதான் மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்த நிலை மாற பாலக்காடு மாவட்ட நிர்வாகம் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Post