ஆஸ்துமாவை குணமாக்கும் மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐதராபாத்தில் ஆண்டு தோறும் மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை அளிக்கப்படுகிறது. பத்தினா சகோதரர்கள் குடும்பத்தினர் கடந்த 175 ஆண்டுகளாக இந்த சிகிச்சையை அளித்து வருகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசு செய்து கொடுத்து வருகிறது.

.....

இந்த ஆண்டுக்கான மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை இன்று ஐதராபாத்தில் உள்ள நாம் பள்ளி கண்காட்சி மைதானத்தில் தொடங்கியது. இதற்காக நேற்று இரவில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் கண்காட்சி மைதானத்தில் குவிந்தனர்.

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, மராட்டியம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆஸ்துமாவுக்கு சிகிச்சை பெற குவிந்துள்ளனர். இங்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்குவதற்காக 40 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 2 மொபைல் கவுண்டர்களும், 2 வி.ஐ.பி. கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிறிய மீன் வாயில் மூலிகை மருந்து வைத்து ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நோயாளியின் வாயில் போட்டு விழுங்க சொல்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு குடிக்க மோர் கொடுக்கிறார்கள். இந்த மருந்தை சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா நோய் குணம் ஆகிறது.

இன்றும், நாளையும் நடக்கும் இந்த முகாமில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக 1 லட்சத்து 32 ஆயிரம் சிறிய மீன்களை தெலுங்கானா அரசு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. 2 நாள் முகாமில் சிகிச்சை பெற முடியாதவர்கள் பத்தினா சகோதரர்களின் வீட்டுக்கு சென்று சிகிச்சை பெறலாம்.

மீன் மருத்துவ முகாமையொட்டி ஐதராபாத் மகாத்மா காந்தி பஸ் நிலையம், ஜூப்ளி பஸ் நிலையம், நாம் பள்ளி, செகந்திராபாத், காட்சிகுடா ரெயில் நிலையங்கள், சம்சா பாத் விமான நிலையம் ஆகிய இடங்களில் இருந்து 133 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 1000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தாகம் தீர்க்க இலவசமாக தண்ணீர் பாக்கெட்டுகள், மோர் வழங்கப்படுகிறது. 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது.

Related Post