பெண்ணுக்கு பாலியல் வன்முறை – இந்திய தொழில் அதிபர் குற்றவாளி என தீர்ப்பு

அமெரிக்காவில் பெண்ணுக்கு பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தொழில் அதிபர் சஞ்சய் திரிபாதி மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

அமெரிக்காவில் பெண்ணுக்கு பாலியல் வன்முறை – இந்திய தொழில் அதிபர் குற்றவாளி என தீர்ப்பு
நியூயார்க்:

.....

அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வருபவர் சஞ்சய் திரிபாதி (வயது 48). இந்தியரான இவர் தகவல் தொழில் நுட்பத்துறையில் நிர்வாகியாக இருந்து பின்னர் தொழில் அதிபர் ஆனவர் ஆவார்.

இவர் அங்கு இளம்பெண்களை நாடுகிற பெரியவர்களுக்கான ‘டேட்டிங்’ இணையதளம் மூலம் 38 வயதான ஒரு பெண்ணுடன் பழகினார். தன்னை பெரும்பணக்காரர் என அறிமுகம் செய்து கொண்ட அவர், குறித்த நாள் அன்று அந்தப் பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்தார். ஓட்டலுக்கு வந்தால் நிச்சயம் பரிசு தருவதாக வாக்குறுதி அளித்து உள்ளார். அதன் பேரிலேயே அந்தப் பெண் அந்த ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு இருவரும் மது அருந்தினர்.

அதன்பின்னர் அவர்கள் இருவரும் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டனர். அப்போது அவர், அந்தப் பெண்ணுடன் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதுடன், மிருகவெறியுடன் தாக்கியதாகவும், அதில் அந்தப் பெண் அடையாளம் காண முடியாத அளவுக்கு படுகாயம் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண்ணின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

சஞ்சய் திரிபாதி மீது மேன்ஹட்டன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டில் அந்தப் பெண் ஆஜராகி, நடந்த சம்பவம் குறித்து உருக்கமுடன் விவரித்தார்.

விசாரணை முடிவில், சஞ்சய் திரிபாதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

Related Post