நீர்வேலி கோவிலில் வாள் வெட்டில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கமறியல்!!

நீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரின் விளக்கமறியலை 14 நாள்களுக்கு நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று (31) உத்தரவிட்டது.

.....

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் வைத்து கடந்த 7ஆம் திகதி திங்கட்கிழமை இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசன் (வயது -23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்டும் கிரிகேசன் (வயது -23) காலில் படுகாயமடைந்த நிலையிலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலுக்குள் வைத்தே அவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை கோவில் கிணற்றுக்குள் வாள்வெட்டுக் கும்பல் தூக்கி வீசியதுடன்ஒருவரின் கைபேசியை கோவிலுக்கு முன்பாக உள்ள தேங்காய் உடைக்கும் கல்லில் போட்டு கும்பல் உடைத்துமிருந்தது.

பொலிஸாரல் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இணுவிலைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட போதும், சாட்சிகள் அடையாளம் காட்டவில்லை.

இந்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமீடியஸ் சந்தேக நபர்கள் மூவரும் இம்முறை உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ளதால் அவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு விண்ணப்பம் செய்தார்.

“சந்தேகநபர்கள் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு அவர்களுடைய கையடக்க தொலைபேசிகளிலிருந்து சான்றுகள் கிடைத்துள்ளன. எனவே சந்தேகநபர்கள் மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு” பொலிஸார் மன்றைக் கேட்டுக் கொண்டனர்.

இருதரப்பு விண்ணப்பத்தையும் ஆராய்ந்த யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Post