சினிமாவை விட்டு ஒதுங்கலாம் என்று நினைத்தேன் – மா.கா.பா.ஆனந்த்

டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்து தனக்கான இடத்தை அடைய போராடிக்கொண்டிருக்கும் மா.கா.பா.ஆனந்த் நடித்த பஞ்சுமிட்டாய் படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. அவரிடம் பேசியதில் இருந்து…

‘இந்த படம் தமிழுக்கு ஒரு புது முயற்சியாக மாய யதார்த்தம் என்னும் வகையில் எடுக்கப்பட்ட படம். ஆங்கில படங்களை போல மனிதர்களையும் அனிமே‌ஷன்களையும் இணைத்து எழுதப்பட்ட கதை. இந்த படத்துக்கான படப்பிடிப்பை ’கூவம் முதல் திருவண்ணாமலை வரை’ பல சிரமமான சூழ்நிலைகளிலும் இடங்களிலும் தான் எடுத்தோம். பெரும் போராட்டத்துக்கு பின் தான் படம் வெளியாகிறது. ஆனால் ரசிகர்களுக்கு முழு திருப்தியை தரும் படமாக இருக்கும். கணவன் மனைவிக்குள்ளான புரிதல் சிக்கல்களை பேசுவதால் படம் பார்ப்பவர்கள் நிச்சயம் தங்கள் வாழ்க்கையை கதையோடு ஒன்றிணைத்துக் கொள்வார்கள். யாரையும் ஏமாற்றாது.

.....

உங்கள் படங்கள் எல்லாமே வெளியாகும்போது ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்குகிறதே?

இதில் என்னுடைய தவறு எதுவுமே இல்லை. எனக்கு தரப்பட்ட வேலையை சரியாக செய்து கொடுத்து விடுகிறேன். அதன்பின் அந்த படம் அந்த தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். சந்தைபடுத்துதல் அவரின் சூழ்நிலையை பொறுத்து தான் அமைகிறது. இங்கே ஒரு படத்தை எடுப்பதை விட அது சரியாக ரசிகனை சென்று அடைய பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. நான் அறிமுக நிலையில் இருப்பதால் இது தொடர்கிறது என நினைக்கிறேன்.

டிவி, சினிமா இரண்டையும் ஒரே நேரத்தில் பயணிக்க திட்டமா?

இரண்டிலுமே பயணிக்க தான் ஆசைப்படுகிறேன். பாண்டிராஜ், தம்பி ராமையா என்று எனது தந்தை இடத்தில் இருப்பவர்களிடம் ஆலோசனைகள் அறிவுரைகள் பெற்றுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் முயற்சிக்க சொல்கிறார்கள். எனக்கு சினிமா இதுவரை முழுநேர பணியாக மாறவில்லை. டிவிக்கு தான் முக்கியத்துவம் தருகிறேன். வாய்ப்பு வருகிற படங்களில் நடிக்கிறேன்.

ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கலாம் என்று நினைத்தேன். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தில் அவருக்கு நண்பராக நடிக்கிறேன். நண்பராக நடிக்க வைக்க அவர்கள்தான் யோசித்தார்கள். ஆனால் நான் யோசிக்கவில்லை. கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கவில்லை. எந்த வேடமாக இருந்தாலும் சரி. தயாராக இருக்கிறேன்.

Related Post