ஈழத் தமிழர்களுக்கான பொதுவாக்கெடுப்பை நடத்த கோரிகை

தமிழர் தலைவிதி தமிழர் கையில்’ எனும் முழக்கத்துடன் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் முதலாவது மக்கள் அரங்கம் கனடாவின் ரொறன்ரோ பெருநகரில் இடம்பெறுகின்றது. ஈழத்தமிழ் மக்களின் அரசியற்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பே சிறந்த பொறிமுறையாக அமையும் என்ற நிலையில்,பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினை ( Yes To Referendum ) உருவாக்கியிருந்தது.

தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழ் மக்களிடத்தில், அவர்களே தமது அரசியற் தலைவிதியைத் தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் என கோரிக்கையுடன் தனது செயற்பாட்டை இந்த இயக்கம் கொண்டுள்ளது. இதனுடைய முதல் மாநாடாக ‘மக்கள் அரங்கம்’ கனடாவின் ரொறன்ரோ பெருநகரில் எதிர்வரும் ஏப்ரல் 15 ஞாயிறன்று Metropolitan Centre, 3840 Finch Ave E, Toronto ON M1T 3T4 எனும் இடத்தில் மாலை 3மணிக்கு இடம்பெற இருக்கின்றது.

தமிழர் தேசம் தனது அரசியல் நிகழ்ச்சிநிரலை தானே தீர்மானிக்கும் வகையில் வியூகம் அமைத்து செயற்படுதல் அவசியமானதாகும். சிறிலங்கா ஆட்சியாளர்களது, அனைத்துலக அரசுகளதும் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, எமக்கான அரசியல் அரங்கை நாம் எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதொரு காலகட்டத்தில் இருக்கிறோம்’

முன்னாள் ஐ.நா. உதவி செயலாளர் நாயகம் அட்ரியனஸ் மெல்கெர்ட் Adrianus (Ad) Melkert உட்பட பல பிரபல சர்வதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு. அமைதியும் ஜனநாயக பூர்வமானதுமான வழியினூடாக நிரந்தரத் தீர்வொன்றைக் கண்டடையும் நோக்குடன் தமிழ் மக்கள் தமது அரசியல் குறிக்கோளைத் தீர்மானிப்பற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடாத்துமாறு கோரிக்கை.

இந்த நிகழ்வினைத் தொடர்ந்து வெவ்வேறு நாடுகளில், ஒரு பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் அரசியற் குறிக்கோளை முடிவு செய்வதையும், அதன் மூலம் நீண்டகாலமாக இலங்கைத் தீவில் நிலவிவரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர காண்பதையும் நோக்காகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளும், மாநாடுகளும் நடாத்தப்படவுள்ளன.

சுதந்திரமான தனியரசுத் தீர்வுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டும் வாக்களிப்பதற்கான பதிலாக அது: ஒற்றையாட்சி, சமஸ்டி ஆட்சி , கூட்டாட்சி (Confederation), சுதந்திரமான தனியரசு (தமிழீழம்), போன்ற நான்கு தெரிவுகளை உள்ளடக்கிய ஒன்றிற்கானதாகவே அமையவுள்ளது.

உலகளாவிய ரீதியில் நிலவிய நீண்டகால வன்முறைகள் நிறைந்த பல முரண்பாடுகள் இவ்வாறான பொது வாக்கெடுப்பின் மூலமாக வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. சர்வதேச நடைமுறைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. தென் சூடானிலும் சரி (Machakos Protocol), பெரிய வெள்ளி ஒப்பந்தம்., சேர்பியன் மொண்டேனெகிரின் ஒப்பந்தம், பப்புவா-நியூகினியா- போகன்வில்லா சமாதான ஒப்பந்தம் போன்றவற்றிலும் சரி எல்லாமே, தேசியப் பிரச்சினைகள் ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமாகவே தீர்க்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை அடிப்படையாகன் கொண்டவையே. இன்னும் சில உதாரணங்களை சொல்வதானால், கிழக்கு தீமோர்,ஸ்கொட்லாண்ட்,கொசோவோ, கியூபெக் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அதேவேளை, இலங்கை அரசின் இறுக்கமான சிங்கள பௌத்த இனவாதப் போக்கின் தன்மை காரணமாக, பூரண சுதந்திரத்தின் மூலமாக மட்டுமே தமிழ் மக்கள் கௌரவத்துடன் கூடிய சமாதானத்துடன் வாழமுடியும் என்று நம்புகிறது.

Related Post