விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவிற்கு மோடி- தலைவர்கள் இரங்கல்

இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை மரணமடைந்தார். நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவரின் விடாமுயற்சியின் மூலம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். இயற்பியலில் அவர் செய்த ஆராய்ச்சி அவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது. அவர் 76 வயதில் தனது வீட்டில் இயற்கையான முறையில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவு அனைவரிடமும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உலகில் உள்ள பல்வேறு தலைவர்கள் ஸ்டீபன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீபன் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டில், ஸ்டீபன் ஹாக்கிங் மிகச்சிறந்த விஞ்ஞானி. அவரின் இறப்பு வேதனை அளிக்கிறது. அவர் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்தியப்பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சவுகான் போன்ற தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் ஸ்டீபன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இயற்பியல் துறையில் பல சாதனைகள் படைத்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறைவு பேரிழப்பு என தெரிவித்துள்ளனர்.

Related Post