கேரளாவில் 2 இடங்களில் காட்டு தீ – பல ஏக்கர் மரங்கள் நாசம்

கேரளாவில் இரண்டு வெவ்வெறு இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல ஏக்கர் அளவிற்கு வனப்பகுதி எரிந்து நாசமடைந்தது.

கேரளாவில் 2 இடங்களில் காட்டு தீ – பல ஏக்கர் மரங்கள் நாசம்
திருவனந்தபுரம்:

தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற பலர் சிக்கி உடல் கருகி பலியானார்கள்.

இதைதொடர்ந்து நாடு முழுவதும் வனப்பகுதிகளில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. அனுமதியின்றி யாரும் காட்டுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் பல இடங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிகளும் நீரின்றி புற்களும், செடி, கொடிகளும் காய்ந்து போய் கிடக்கிறது. இதனால் இங்கு காட்டு தீ பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் வன அதிகாரிகளும், ஊழியர்களும் வனப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். திருவனந்தபுரம் அருகே விதுரா ஆதிரப்பள்ளி என்ற இடத்தில் பெரிய வனப் பகுதி உள்ளது. இங்கு பல அரியவகை விலங்குகளும், விலை உயர்ந்த மரங்களும் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் வனத்துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்த நிலையில் இங்குள்ள பருத்திப்பள்ளி என்ற இடத்தில் திடீரென்று தீ பிடித்து மரங்கள், செடி, கொடிகள் எரிந்தன. இந்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். அதற்குள் 2 ஏக்கர் அளவிற்கு வனப்பகுதி நாசமாகிவிட்டது.

இந்த தீ எப்படி பிடித்தது என்பதை கண்டுபிடிக்க அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை வன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது ஒருவரின் உருவம் அதில் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தி அந்த பகுதியை சேர்ந்த சீதங்கன் காணி என்ற ஆதிவாசியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் காட்டில் கிடந்த காய்ந்த இலை, தழைகளை எரித்தபோது தீ பிடித்தது தெரியவந்தது.

அதேபோல திருச்சூர் பகுதியில் உள்ள வாழைச்சல் வனப்பகுதியிலும் காட்டு தீ பரவி உள்ளது. இங்கு காற்றின் காரணமாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ வேகமாக பரவி வருகிறது. இதுவரை 50 ஹெக்டேர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகிவிட்டது. அங்கும் தீ அணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Related Post