கருணை கொலைக்கு அனுமதி கேட்கும் தாய்-மகள்

உத்தரபிரதேசத்தில் தசைநார் நோயால் பாதிக்கப்பட்ட தாயும், மகளும் கருணை கொலைக்கு அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர்.

கருணை கொலைக்கு அனுமதி கேட்கும் தாய்-மகள்
கான்பூர்:

தீராத நோய் உள்ளவர்கள் கண்ணியமாக மரணிக்க அனுமதிக்கலாம் என்று கருணை கொலைக்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அனுமதித்து தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் தசைநார் நோயால் பாதிக்கப்பட்ட தாயும், மகளும் கருணை கொலைக்கு அனுமதி கேட்டு உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் ‌ஷசி மிஸ்ரா (வயது 59). இவரது மகள் அனாமிகா மிஸ்ரா (33).

இருவரும் மஸ்குலர் டிஸ்திரோபி எனப்படும் தசைநார் தேய்வு நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களின் சிகிச்சைக்கு போதிய உதவி இல்லாததால் கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு இருவரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜ் நாராயணன் பாண்டே கூறும்போது, “கருணைக் கொலைக்கு அனுமதி கேட்டு தாயும், மகளும் ஜனாதிபதி மாளிகைக்கு நேரடியாக கடிதம் அனுப்பி உள்ளனர்” என்றார்.

இது குறித்து கருணை கொலைக்கு அனுமதி கேட்ட அனாமிகா கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோருக்கும் கடிதம் அனுப்பப்பட உள்ளது. எங்கள் நோய்க்கு சிகிச்சை அளிக்க நிதி உதவி செய்யுங்கள். அல்லது சாவதற்கு அனுமதி அளியுங்கள் என்று கேட்டுள்ளோம்.

சிகிச்சைக்காக எங்களுக்கு ரூ.50 ஆயிரம் ஏற்கனவே கொடுக்கப்பட்டது. இது போதுமானது அல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Post