பெங்களூரு சிறையில் சசிகலா சாதாரண உடையில் இருக்கும் படம் வெளியானது

பெங்களூரு சிறையில் தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா திடீரென்று ஆய்வு செய்தபோது சசிகலா, இளவரசி சிறை சீருடையின்றி சாதாரண உடையில் இருக்கும் படம் வெளியாகி உள்ளது.

பெங்களூரு சிறையில் சசிகலா சாதாரண உடையில் இருக்கும் படம் வெளியானது
பெங்களூரு:

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன. இதற்காக சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சமாக பெற்றதாகவும் அவர் மீது முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சுமத்தியுள்ளார். இதுகுறித்து சத்திய நாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி பரப்பனஅக்ரஹாரா சிறையில் தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா திடீரென்று ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் சிறையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறை சீருடையின்றி, சாதாரண உடையில் இருப்பதை பார்த்து அதிகாரியிடம் கடிந்து கொண்டார்.

இந்த வேளையில், அவர்கள் 2 பேரும் சிறை விதிமுறைக்கு உட்பட்டு தான் சாதாரண ஆடை அணிந்திருந்ததாக அதிகாரிகள் ரேகா சர்மாவிடம் கூறினார்கள். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிறையில் ரேகா சர்மா ஆய்வு செய்தபோது சாதாரண ஆடையில் சசிகலா இருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Related Post