பாராளுமன்றத்தில் அத்வானியுடன் ராகுல் திடீர் சந்திப்பு

பாராளுமன்றத்தில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியை ராகுல்காந்தி திடீர் என்று சந்தித்து நலம் விசாரித்தது அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது.

பாராளுமன்றத்தில் அத்வானியுடன் ராகுல் திடீர் சந்திப்பு
கோப்புப்படம்
புதுடெல்லி:

முன்னாள் துணைப் பிரதமரும் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான எல்.கே அத்வானிக்கு கட்சிப் பணியிலும், ஆட்சி பணியிலும் எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை.

அவர் எம்.பி.யாக இருப்பதால் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தவறாமல் கலந்து கொள்கிறார். கட்சி ஆலோசனை கூட்டங்களிலும் மூத்த நிர்வாகி என்ற முறையில் கலந்து கொள்கிறார். பா.ஜனதா தலைவர்கள் யாரும் அவரை சரியாக கண்டுகொள்ளவில்லை.

இந்தநிலையில் அத்வானியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று திடீர் என்று சந்தித்து நலம் விசாரித்தது அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது. நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தின் மக்களவை நடவடிக்கைகள் தொடங்கும் முன்பு 10 நிமிடத்துக்கு முன்னதாகவே அத்வானி வந்து தனது இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

அப்போது ராகுல் காந்தியும் உள்ளே நுழைந்தார். தனது இருக்கை நோக்கி சென்ற அவர் அத்வானி அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவர் அருகில் சென்று கைகளைப் பிடித்து வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்தார்.

அதற்கு அத்வானி கூறுகையில், ‘‘நான் நலமாக இருக்கிறேன். சபைதான் (பாராளுமன்றம்) அப்படி இல்லை’’ என்றார்.

சமீப காலமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை கிளப்புவதால் தினமும் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகிறது. அதை குறிப்பிடும் வகையில் அத்வானி இவ்வாறு கூறினார்.

பின்னர் ராகுல்காந்தி தனது இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டார்.

Related Post