திருமணத்தன்று மணப்பெண் மாரடைப்பால் மரணம்- மாப்புள்ள அழுகை

ஐதராபாத்தில் திருமணத்தன்று மணப்பெண் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவத்தால் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் இருந்த திருமண மண்டபம் சோக மயமானது.

ஐதராபாத்தில் திருமணத்தன்று மணப்பெண் மாரடைப்பால் மரணம்
ஐதராபாத்:

ஐதராபாத் சூர்யாபேட் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜி.வேணு என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். இவர்களுடன், குடும்பத்தினர் சிலரும் சென்று இருந்தனர். மணமக்கள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பினர்.

அப்போது கோவிலுக்கு வெளியே வந்த மணப்பெண் காயத்ரி திடீரென மயங்கி சரிந்தார். இதனால் பதட்டம் அடைந்த குடும்பத்தினர் அவரை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லை.

எனவே வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திருமணத்தின் போது அதிக சத்தத்துடன் கூடிய இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் திருமணத்துக்கு முன்பு மணமகள் காயத்ரி உணவு உண்ணாமல் நோன்பு இருந்தார்.

திருமணம் முடிந்ததும் அவசர அவசரமாக உணவு சாப்பிட்டதாலும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதால் காயத்ரி குடும்பத்தினர் போலீசாரை அணுகவில்லை. இது இயற்கையான மரணம் என கூறி விட்டனர். திருமணத்தால் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் இருந்த மண்டபம் மணமகள் மரணத்தால் சோக மயமானது.

Related Post