ஆம்புலன்சுக்கு லஞ்சம் கேட்டதால் மகனின் பிணத்தை பஸ் நிலையத்துக்கு சுமந்து சென்ற தந்தை

ஒடிசா மாநிலத்தில் இலவச ஆம்புலன்சுக்கு லஞ்சம் கேட்ட காரணத்தால் மகனின் பிணத்தை தோளில் சுமந்தபடி பஸ் நிலையத்துக்கு தந்தை தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலவச ஆம்புலன்சுக்கு லஞ்சம் கேட்டதால் மகனின் பிணத்தை பஸ் நிலையத்துக்கு சுமந்து சென்ற தந்தை
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் மயூர் பஞ்ச் மாவட்டம் கலாகினி மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் பாஜுன் சோரன் (57). இவரது 3 வயது மகன் ஜோகேஸ்வர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டான். எனவே அவனை பரிடாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு ஜோகேஸ்வர் பரிதாபமாக இறந்தான். இதனால் பாஜுன் சோரனும் அவரது மனைவியும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஏழை குடும்பத்தை சேர்ந்த அவர்களால் தங்களது மகன் உடலை இரவு நேரத்தில் ஆம்புலன்சில் எடுத்து செல்ல பண வசதி இல்லை. எனவே அரசின் இலவச பிண ஊர்தி ஆம்புலன்சுக்காக மகனின் பிணத்துடன் தூங்காமல் இரவு முழுவதும் ஆஸ்பத்திரியில் காத்திருந்தனர். அவர்களுடன் 5 வயது மகளும் இருந்தார்.

பொழுது விடிந்ததும் பாஜுன்சோரன் இலவச பிண ஊர்தி ஆம்புலன்ஸ் சேவையை அணுகிறார். ஆனால் பிணத்தை எடுத்த ஆம்புலன்ஸ் டிரைவர் ரூ.400 லஞ்சம் கேட்டார்.

அந்த பணத்தை தர அவரால் முடியவில்லை. எவ்வளவோ கெஞ்சியும், மன்றாடியும் லஞ்சமின்றி பிணத்தை எடுத்து செல்ல டிரைவர் மறுத்துவிட்டார்.

இதனால் மனம் வருந்திய பாஜுன் சோரன் தனது மகனின் உடலை சோகத்துடன் சுமந்து சென்றார். அவருடன் மனைவி மற்றும் மகளும் நடந்து சென்றனர்.

பின்னர் பஸ் நிறுத்தம் வந்ததும் பயணிகள் பஸ்சில் ஏறி தங்கள் கிராமத்துக்கு சென்று மகனின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்தனர்.

இதற்கு முன்பு ஒடிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த ஏழை தொழிலாளி தனா மஜ்கி என்பவரின் மனைவி இதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். உடலை எடுத்து செல்ல இலவச ஆம்புலன்ஸ் டிரைவர் லஞ்ச பணம் கேட்டதால் மனைவியின் உடலை 10 கி.மீட்டர் தூரம் சுமந்து சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் அடங்குவதற்கு முன் மீண்டும் அதே நிலை தொடர்ந்துள்ளது. அங்குள்ள ஊழியர்களின் மனிதாபிமானமற்ற செயலை காட்டுகிறது.

Related Post