கணக்கு வழக்கில் குழப்பம் – ஜி.எஸ்.டி.யில் ரூ.34 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

நாடு முழுவதும் இதற்கு முன்பு பொருட்கள் மற்றும் சேவைப்பணிகளுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட வரியையும், மாநில அரசு தனியாக குறிப்பிட்ட வரியையும் விதித்து வந்தது. இதுதவிர மேலும் பல வரிகளும் விதிக்கப்பட்டன.

இவை அனைத்தையும் ஒன்றாக்கி ஜி.எஸ்.டி. என்ற புதிய வரி முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி விதிக்கப்படும் வரியில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் பங்கிட்டுக் கொள்ளும்.

இந்த வரி செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மாதந்தோறும் அதற்கான ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக பலவித படிவங்களும் உள்ளன. அதில் ஜி.எஸ்.டி. ஆர்.1, ஜி.எஸ்.டி. ஆர்-3பி ஆகியவற்றை மாதாந்திர வாரியாக தாக்கல் செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி.ஆர்.3பி-யில் சுருக்கமாக விவரங்களை குறிப்பிட வேண்டும். ஜி.எஸ்.டி.ஆர்.1-ல் முழு விவரங்களை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு தாக்கல் செய்யப்படும் இரு ரிட்டன் படிவங்களையும் ஒப்பிட்டு வரி விகிதம் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்று பார்க்கப்படும். இவ்வாறு ஒப்பிட்டு பார்த்ததில் வரி செலுத்தியதில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடிக்கு அளவுக்கு வித்தியாசம் வருகிறது.

அதாவது விற்கப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் தொடர்பான விவரங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு செல்போனின் விலையை குறிப்பிட்ட தொகையை விட குறைவாக காட்டி இருக்கிறார்கள்.

அதில் ஒவ்வொரு படிவத்திலும் வேறு மாதிரியாக இருக்கிறது. வரியை குறைவாக செலுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு குறைத்து காட்டப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு தொகையை திரும்ப பெறுவது தொடர்பாக மத்திய நிதித்துறை ஆலோசித்து உள்ளது.

கடந்த சனிக்கிழமை ஜி.எஸ்.டி. தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வரி ஏய்ப்பு செய்த தொகையை எப்படி பெறுவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வரி ஆலோசகர்கள் கூறும்போது, 2 படிவங்களில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்கள் மாறுவதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அதில் உள்ள சில குழப்பங்கள் உள்ளதால் இவ்வாறு மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதை வரி ஏய்ப்பாக கருத முடியாது. அதில் உள்ள வித்தியாசங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் அதை திருப்பி செலுத்த முடியும் என்று கூறினார்கள்.

Related Post