கேரளாவில் காங். தொண்டர் கொலை- கைதான 4 கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

கேரளாவில் காங்கிரஸ் தொண்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 4 நிர்வாகிகள் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் காங். தொண்டர் கொலை- கைதான 4 கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்
திருவனந்தபுரம்:

கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு அங்கு அரசியல் கட்சிகள் இடையே மோதல்கள் அதிகரித்துள்ளது. இதனால் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பாரதிய ஜனதா தொண்டர்கள் இடையே மாநிலத்தின் பல இடங்களில் தொடர் மோதல்கள் நடப்பதால் பல இடங்களில் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த மாவட்டமான கண்ணூரில் தான் அதிகளவில் அரசியல் கொலைகள் நடந்துள்ளது. இதனால் மாநில அரசுக்கு கண்டனங்களும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் கண்ணூரை சேர்ந்த சுகைது என்ற காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர்புகை வீச்சு நடப்பதால் மாநிலத்தின் பல இடங்களில் போராட்டம் நடக்கும் இடம் போர்களம் போல மாறி வருகிறது.

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சுகைது கொலை தொடர்பாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் 6 பேரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் ஆகும்.

இந்த கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இதனால் கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஆகாஷ் (வயது 24), தீப்சந்த் (25), அஸ்கர் (26), அகில் (21) ஆகிய 4 பேரை அந்த கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளனர். அந்த கட்சியின் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related Post