ஓவியாவை ஏன் பிடிக்கும் – காரணம் கூறிய ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஆரவ். அதில் பரிசு தொகையையும் வென்றார்.

இந்த நிகழ்ச்சியின் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியாவுக்கும், ஆரவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆரவ் அதை மறுத்தார். இதையடுத்து, ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

ஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது.

இதை பின்னர் மறைமுகமாகவும் ஓவியா தெரிவித்தார். பின்னர் ஓவியா சகஜமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. ஓவியாவின் சினிமா மார்க்கெட் சூடு பிடித்தது. பிரபல நிறுவனங்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் தேடி வந்தன. விளம்பர படங்களிலும் நடித்தார். இது போல் ஆரவுக்கும் தனி அடையாளமும், புதிய பட வாய்ப்புகளும் கிடைத்தன.

பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் இப்போது சாதாரணமாக பழகுகிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். ஓவியாவை தனக்கு ஏன் பிடிக்கும் என்ற காரணத்தை கூறியுள்ள ஆரவ், “நாம் நாமாக இருப்பது தான் உலகத்திலேயே மிக கஷ்டமான வி‌ஷயம். ஏதோ ஒரு வகையில் பெரும்பாலான இடங்களில் நாம் நடித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் ஓவியா அப்படி இல்லாமல் எல்லா இடத்திலும் அவராகவே இருக்கிறார். அவரை எனக்கும், எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் அவருக்காக தனி படை உருவாக்கும் அளவுக்கு ஓவியா பெயர் பெற்றதற்கும் அது தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Post