டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் டிடிவி தினகரன். இதையடுத்து, தனது அணிக்கு அங்கீகாரம் கிடைக்கும் வரையில் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக பயன்படுத்த முடிவு செய்த டிடிவி தினகரன், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்ற சூழ்நிலையில், தனக்கு குக்கர் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார். மேலும், அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தபோது தங்கள் அணிக்கு வழங்கப்பட்ட, ‘அ.தி.மு.க. அம்மா’ என்ற பெயரையும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரியிருந்தார்.

டிடிவி தினகரன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் டிடிவி தினகரன் தனது புதிய கட்சிக்கு பரிந்துரை செய்த அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்.ஜி.ஆர். அம்மா முன்னேற்றக் கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் ஆகிய 3 பெயர்களில் ஒன்றை அளிக்கவும் உத்தரவிட்டது.

Related Post