டெல்லியில் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

தலைநகர் டெல்லியில் உள்ள பிரபல தலைவர்களின் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
புதுடெல்லி:

திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை உடைக்கப்பட்டது மற்றும் தமிழகத்தின் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது ஆகியவை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுரா, தமிழ்நாட்டை தொடர்ந்து, மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜ.க.வுக்கு முன்னோடியான பாரதிய ஜனசங்கம் கட்சியின் நிறுவன தலைவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்துக்கு உட்பட்ட மாவானா பகுதியில் அம்பேத்கர் சிலையை சில சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தினர். இப்படி தொடர்ந்து தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருவது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பிரபல தலைவர்களின் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், டெல்லியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் தயார் நிலையில் இருக்கும்படியும், சிலைகள் சேதப்படுத்தும் நடவடிக்கைகள் தொடராது இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளோம்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள முக்கிய இடங்களில் காணப்படும் பிரபல தலைவர்களின் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Post