திரிபுராவில் லெனின் சிலை திடீர் அகற்றம் – பா.ஜனதா மீது மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

திரிபுராவில் சோவியத் ரஷிய தலைவர் லெனின் சிலை திடீரென அகற்றப்பட்டது. இந்த செயலுக்கு பா.ஜனதாவே காரணம் என்று மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

திரிபுராவில் லெனின் சிலை திடீர் அகற்றம் – பா.ஜனதா மீது மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
அகர்தலா:

திரிபுராவில் சோவியத் ரஷிய தலைவர் லெனின் சிலை திடீரென அகற்றப்பட்டது. இந்த செயலுக்கு பா.ஜனதாவே காரணம் என்று மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்டியது.

முதல் முறையாக பா.ஜனதா திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றி இருப்பதால் அங்கு அக்கட்சியின் தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில இடங்களில் மார்க்சிஸ்ட்- பா.ஜனதா தொண்டர்களிடையே மோதலும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள பெலோனியா நகரில் நிறுவப்பட்டிருந்த சோவியத் ரஷியாவின் மறைந்த தலைவர் விளாடிமீர் லெனின் சிலை திடீரென அகற்றப்பட்டது.

இதுபற்றி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் தபஸ் தத்தா நிருபர்களிடம் கூறுகையில், “பெலோனியா நகரின் கல்லூரி சதுக்கத்தில் கண்ணாடி இழையால் ஆன 5 அடி உயர லெனின் சிலை நிறுவப்பட்டு இருந்தது. இதை பா.ஜனதாவினர் பொக்லைன் எந்திரம் மூலம் இழுத்து கீழே தள்ளிவிட்டனர். பின்னர், அவர்கள் பாரத மாதா வாழ்க என்று கோஷமும் எழுப்பினர்” என்று குற்றம் சாட்டினார். இதுபற்றி அவர் போலீசிலும் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து லெனின் சிலையை அகற்ற பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரத்தின் டிரைவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பொக்லைன் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த சிலை பெலோனியா நகரசபை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

லெனின் சிலை திடீரென அகற்றப்பட்டதால் திரிபுரா மாநிலத்தின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இதனால் வன்முறை பரவாமலிருக்க மேற்கு மற்றும் தெற்கு திரிபுரா மாவட்டத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மட்டும் திரிபுராவில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் 1,500 பேர் தாக்கப்பட்டு இருப்பதாகவும், தங்கள் கட்சியினரின் 196 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு இருப்பதாகவும் பா.ஜனதா மீது மார்க்சிஸ்ட் குற்றம்சாட்டி உள்ளது.

இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திரிபுரா கவர்னர் ததகதா ராய் மற்றும் மாநில டி.ஜி.பி சுக்லா ஆகியோரை டெலிபோனில் தொடர்பு கொண்டு புதிய அரசு அமையும் வரை வன்முறையை தடுத்து மாநிலத்தில் அமைதியை உறுதி செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

Related Post