வரலட்சுமிக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசளித்த விஜய் படக்குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சன் நெட்வொர்க் அலுவலகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் கருப்பு நிற கோர்ட் ஷூட் போட்டு கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.

இதையடுத்து சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இவர்கள் கூட்டணியில் பிரபல அரசியல்வாதி பழ கருப்பையாவும், ராதாரவியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வரலட்சுமி சரத்குமாரும் இப்படக்குழுவில் இணைந்திருக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதிபடுத்தி உள்ளது. வரலட்சுமி பிறந்த நாளான இன்று விஜய் படத்தில் நடிப்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி படுத்தி இருப்பது, அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசாக அமைந்திருக்கிறது.

Related Post