கேரள முதல்வரை சந்தித்தார் கமல்ஹாசன்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் திடீரென அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது.

இதுதொடர்பாக, கேரள முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் பினராயி விஜயன், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இது ஏற்கனவே திட்டமிட்டது தான். அவருடன் அவரது மனைவியும் சென்றுள்ளார். நாளை பினராயி விஜயன் கேரளா திரும்புவார் என கூறப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்து நேற்று மாலை சுமார் 4 மணியளவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் பினராயி விஜயன் ஓய்வெடுத்தார். அப்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், கேரள முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு ஒருசில நிமிடங்கள் மட்டும் நடந்ததாகவும், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் இருதரப்பினரும் தெரிவித்தனர்.

அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னரே ஓணம் பண்டிகையின்போது கேரள முதல்வரின் வீட்டிற்கு கமல்ஹாசன் சென்று அவரிடம் ஆசிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post