பாபா ராம்தேவ் நிறுவனத்தில் பிடிபட்ட 50 டன் சந்தனக் கட்டை – மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டிஸ்

பாபா ராம்தேவிற்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் பல்வேறு ஆயுர்வேத பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஆந்திரப்பிரதேச வனத்துறையினர் சிவப்பு நிற சந்தனக் கட்டைகளை ஏலத்தில் விட்டனர். இதில் சுமார் 50 டன் சிவப்பு நிற சந்தனக் கட்டைகளை பதஞ்சலி நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.

ஆனால் இந்த சந்தனக் கட்டைகளை சொந்த பயன்பாட்டிற்காக உபயோகிக்காமல், சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய பதஜ்சலி நிறுவனம் முயற்சி செய்தது. அதற்காக அயல்நாட்டு வர்த்தக ஏற்றுமதி இயக்குனரகத்திடம், அனுமதியும் பெறப்பட்டது. ஆனால் அந்த சந்தனக் கட்டைகள் உயர் மதிப்பு உடையவையாகும்.

நம் நாட்டின் சட்டப்படி குறைந்த மதிப்பு சந்தனக் கட்டைகளை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் இந்த சந்தனக் கட்டைகள் உயர்மதிப்புடையவை என்பது வருவாய் புலனாய்வு இயக்குனரகம் நடத்திய சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து 50 டன் சந்தனக் கட்டைகளையும், அவற்றை ஏற்றுமதி செய்ய அயல்நாட்டு வர்த்தக ஏற்றுமதி இயக்குனரகம் அளித்த அனுமதியையும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்தது.

இந்நிலையில், வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கைப்பற்றிய சந்தனக் கட்டைகளை விடுவிக்குமாறு பதஞ்சலி நிறுவனம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 18-ம் தேதிக்கு ஒத்துவைத்தார்.

Related Post