நிரவ் மோடியுடனான தொடர்பை முறித்துக் கொண்ட பிரியங்கா சோப்ரா

வைர வியாபாரி நிரவ்மோடி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவருடனான தொடர்பை பிரியங்கா சோப்ரா முறித்துக் கொண்டுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ்மோடி ரூ.11,500 கோடி மோசடி செய்தது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இப்போது வருமான வரித்துறையினரும் இதில் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நிரவ் மோடி தற்போது இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

நிரவ் மோடி நிறுவனத்தின் விளம்பரப்படங்களில் நடிகை பிரியங்கா சோப்ரா, இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடன் தோன்றி நடித்து வந்தார். இதற்காக அவர் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இருந்தார்.

தற்போது பிரியங்கா சோப்ரா அவரது நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து உள்ளார்.

இது தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் விடுத்து உள்ள அறிக்கையில், ’சமீபத்தில் எழுந்து உள்ள குற்றச்சாட்டுகளால், நிரவ் மோடி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பிரியங்கா சோப்ரா ரத்து செய்து விட்டார்’ என குறிப்பிட்டு உள்ளார்.

சித்தார்த் மல்கோத்ரா, நிரவ் மோடி நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிந்து விட்டது. எனவே நான் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்போவது இல்லை என்று கூறி விட்டார்.

Related Post