ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட காதலியை காதலர் தினத்தில் கரம் பிடித்த பெண்

ஆசிட் வீச்சில் 80 சதவீத தீக்காயத்துடன் பார்வையையும் பறி கொடுத்த இளம் பெண்ணுக்கும் அவரது பாதுகாவலராக விளங்கிய வாலிபருக்கும் காதலர் தினமான இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. #valentineday

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட
பின் தனக்கு உறுதுணையாக இருந்தவரை கரம் பிடித்த பெண்
புபனேஷ்வர்:

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ஜகத்பூரில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரமோதினி என்ற 17 வயது இளம் பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசினர். அவர் கல்லூரிக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கும் போது இச்சம்பவம் நடந்தது. இதில் பிரமோதினி 80 சதவீத தீக்காயங்களுடன், கண் பார்வையையும் இழந்தார்.

அரசு மருத்துவமனையில் 9 மாத காலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேற்கொண்டு சிகிச்சை பெற போதிய அளவு பணம் இல்லாததால் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 5 ஆண்டு காலம் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த பிரமோதினிக்கு 2014-ம் ஆண்டு வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனை செவிலியர் மூலமாக சாகு என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பிரமோதினி உடல்நலம் தேர சாகு உறுதுணையாக இருந்தார். அதன் பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

இதையடுத்து, ‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ சிகிச்சைக்காக பிரமோதினி 2016-ம் ஆண்டு டெல்லி வந்தார். பிரமோதினியுடன் பழகி வந்த சாகுவால் அவரது பிரிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னால் பிரமோதினியை பிரிந்து வாழ முடியாது என்பதை சாகு புரிந்து கொண்டார். உடனடியாக பிரமோதினியை போனில் தொடர்பு கொண்டு தனது மனதில் உள்ள காதலை கூறினார்.

ஆனால், பிரமோதினி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தனக்கு கண் பார்வை இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ முடியாது என கூறினார். பின்னர் சாகுவின் முயற்சியால் கண் சிகிச்சை மூலம் பிரமோதினி 20 சதவீத பார்வையை பெற்று, அவரின் காதலையும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இருவரும் காதலர் தினமான இன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ‘ஸ்டாப் அசிட் அட்டாக்’ திட்டத்தின் உறுப்பினர்களால் நடத்தப்படும் காபி பாரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இருவரும் அடுத்த ஆண்டு இதே நாளில் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு ஒடிசாவில் காபி பார் வைத்து ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுகு வேலை வாய்ப்பு தருவது தான் எதிர்கால திட்டம் என இருவரும் தெரிவித்தனர்.

Related Post