தரம் தாழ்ந்து பேசும் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: திருமாவளவன்

தரம் தாழ்ந்து பேசும் எச்.ராஜா எந்தக் கட்சியின் பொறுப்பில் இருப்பவர்களாக இருந்தாலும் தமிழக அரசு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

தரம் தாழ்ந்து பேசும் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: திருமாவளவன்
காஞ்சீபுரம்:

பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் காந்தி ரோடு பெரியார் நினைவுத் தூண் அருகே தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன பொதுக் கூட்டம் நடை பெற்றது.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கோயில்களில் தீ விபத்து ஏற்படும் போது அதனைத் தடுக்க கோயில்களின் வெளியே தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது கண்துடைப்பான அறிவிப்பு. அனைத்து கோயில்களின் வெளியேயும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்த முடியுமா?

கோயில்களில் நடைபெற்ற தீ விபத்தின் உண்மைத்தன்மை அறிய தமிழக அரசு உடனடியாக விசாரணை ஆணையத்தினை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அரசியலில் நாகரிகம் வேண்டும். நாகரிகம் குறைவாக பேசுதல் கூடாது. பாரதிய ஜனதாவின் எச்.ராஜா பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தரம் தாழ்ந்து பேசுபவர்கள் எந்தக் கட்சியின் பொறுப்பில் இருப்பவர்களாக இருந்தாலும் தமிழக அரசு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

ஏறத்தாழ 25 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினையை தீர்க்க இயலாத அரசாக தற்போதைய அரசு உள்ளது.

எனவே தமிழகத்தில் சிறந்த முறையில் மக்கள் விரும்பும் ஆட்சி ஸ்டாலின் தலைமையில் அமையும். அந்த ஆட்சி தமிழகத்தில் இருந்து ஊழலை அகற்றும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

தமிழகத்தில் இருந்து ஊழலை ஒழித்து விடலாம். ஆனால் மதவாதம் பரவினால் அதனை அகற்றுவது கடினம். எங்களின் ஒட்டுமொத்த கொள்கை மதவாதத்தை ஒழிப்பதே.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எழிலரசன் எம்.எல்.ஏ., சன்பிராண்ட் ஆறுமுகம், சி.வி.எம்.அ.சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன், சிறுவேடல் செல்வம், பி.எம்.குமார், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் ஜீவி.மதியழகன், முன்னாள் எம்பி. பெ.விஸ்வநாதன், மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Post