சிரியா மீது தாக்குதல் நடத்துவோம் மிரட்டும் பிரான்ஸ்

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அதிபரின் ஆதரவு படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாக அதிபர் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு எதிராக சிரிய அரசு தடை செய்த ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஜனவரி தொடக்கத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் 6 முறை குளோரின் தாக்குதல்கள் நடந்ததில் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இதுபற்றி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘தடை செய்யப்பட்ட குளோரின் போன்ற ரசாயன ஆயுதங்களை பொதுமக்களுக்கு எதிராக சிரிய அரசு பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது எங்களிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லை. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டு ஆதாரம் கிடைத்தால், நாங்கள் சிரியா மீது போர் தொடுப்போம்.’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Post