சினிமாவை விட்டு விலகுகிறேனா – கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தை விரைவில் வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தபோது அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். எனவே, இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை.

‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் கமலின் காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அந்த படம் இன்னும் முழுமை பெற வில்லை. இதற்கான படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியல் குறுக்கிட்டதால் அந்த பட வேலைகள் முடியாமல் இருக்கிறது.

இந்த நிலையில் ‘இந்தியன்-2’ படம் தொடங்க இருப்பதாகவும் ‌ஷங்கர் இதை இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே கமல், வருகிற 21-ந் தேதி அவரது கட்சியின் பெயரை அறிவிக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்கா சென்றிருந்த கமல் பேசிய போது, விஸ்வரூபம் 2, இந்தியன் 2 படங்கள் வெளியானதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அதேநேரத்தில் அவர் ஒப்பந்தமாகி இருந்த சபாஷ் நாயடு படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், கமல் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், அதனால் அவர் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இந்த தகவல் குறித்து கமல் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், நான் ஒப்பந்தமாகியுள்ள 3 படங்களை நடித்து முடித்தவுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்பேன். முழுநேர அரசியலில் ஈடுபட்டதும் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ‘விஸ்வரூபம்-2’, ‘சபாஷ் நாயடு’ மற்றும் ‘இந்தியன்-2’ ஆகிய 3 படங்களும் வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது.

Related Post